Monday, September 9, 2024

உலகையே திடுக்கிடச் செய்த கொரோனா பேரழிவு [ Safe Guard - Article 07 ]


Safe Guard

Phase - 1

Session - 1

உலகையே ஆட்டிப்படைத்த பல்வேறு பேரழிவுகள் குறித்து நாம் அறிந்திருப்போம். பேரழிவுகள் குறிப்பாக மனிதனாலும் சூழலினாலும் ஏற்படுவதுண்டு. இவற்றால் மனிதன் ஏராளமான சவால்களை சந்தித்திருந்த போதிலும் பேரழிவுகளை ஏற்படுத்திய பட்டியலில் இயற்கை அனர்த்தங்கள் மற்றும் மனிதப் போர்களுக்கு மத்தியில் கண்ணுக்குப் புலப்படாத கொரோனா வைரஸும் தன்னை அடையாளப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. உலகிலேயே குறிப்பிட்ட காலத்திற்கு அதிக தாக்கம் செலுத்தி வந்திருந்த போதிலும், அதனால் ஏற்பட்ட தாக்கம் மக்கள் மனங்களில் என்றும் அகலவில்லை என்றே கூற வேண்டும். அந்த வகையில் கொள்ளை நோயாய் வந்த கொரோனா கொத்துக்கொத்தாய் உயிர்ப்பலி எடுத்தது உலகம் அறிந்த விடயமே. அவ்வாறான பேரழிவை ஏற்படுத்திய கொரோனா வைரஸும் அதன் ஆதிக்கம் மற்றும் விளைவுகள் குறித்து சற்று சுருக்கமாகவே ஆராய்ச்சிப் பார்வையை செலுத்துவோம்.

குறிப்பாக இவ் வைரஸ் தொற்றானது கொரோனா என அழைக்கப்பட்டாலும் இந் நோயினை நாம் கோவிட்-19 என அடையாளப்படுத்துகிறோம். 2019 ஆம் ஆண்டில் இத்தொற்றுப் பரவல் ஏற்பட்டதாலேயே கோவிட்-19 எனப்பட்டது. "இத்தொற்று எங்கிருந்து உலகம் முழுவதும் வியாபித்தது?" என உங்கள் மனங்களில் கேள்வி உண்டாகலாம். ஆம். அது குறிப்பாக பொருளாதாரத்தில் முன்னணி வகித்து வரும் பிரதான நாடுகளில் ஒன்றான சீனாவிலேயே ஆரம்பித்தது. அதாவது சீனாவில் வுஹான் மாநிலத்தில் பரவிய பின்னரே உலக நாடுகள் அனைத்திலும் அதன் தாக்கம் வியாபித்தது. குறித்த மாநிலத்தின் இறைச்சி பண்ணை ஒன்றே இத்தொற்று மற்றும் உலகப்பேரழிவுக்கு காரணம் என்று கூறினால் அது மிகையில்லை. அப்பண்ணையில்  முதலை, ஓணான், பாம்பு எலி வௌவால் போன்ற 121 காட்டு மிருகங்கள் சுகாதார ஸ்தாபனம் தடை செய்யப்பட்டிருந்தும் உணவுக்காக விற்கப்பட்டுள்ளமை ஊர்ஜிதமானது. இவற்றை உட்கொண்ட பின்பே அது தொற்றாக வியாபித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் சான்றுப் படுத்துகின்றனர். எனினும் இதற்கு எதிராக மாற்று கருத்துக்கள் முன்வைத்தோர்களும் உளர் என்பது மறுக்க முடியாது. இத்தொற்றானது 2019 டிசம்பர் பரவிய போதும் கூட 2020 ஜனவரி மாதத்திலேயே அவசரகால நிலையை உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்தது; பின்பே மார்ச் மாதம் உலகளாவிய நோய் தொற்று என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டமாக இத்தொற்றுப் பரவல் எவ்வாறு பரவலடைந்தது என்பது குறித்து பார்வையை செலுத்துவோம். தனது ஆதிக்கத்தை பெருக்கிக் கொண்டு தீவிரமாக செயல்படும் தன்மை கொண்டதாக கண்டறியப்பட்டது. மேலும் இது வாய், மூக்கு, கண் வழியே நுழைந்து பிறகு மூக்கு, தொண்டை, சுவாசக் குழாய், நுரையீரல் பகுதிகளிலுள்ள செல்களில் ஒட்டிக்கொள்கிறது. அதன் தொடர்ச்சியாக இவ்வைரஸ் பெருக்கெடுப்பதாக ஆய்வுகள் கூறிய முடிவுகள் நாம் அறிந்ததே. இத்தொற்றின் ஆரம்ப அறிகுறிகளாக காய்ச்சல், இருமல், தொண்டைப்புண் என்பனவும் பிறகு, இரத்தம் உறையச் செய்தல், நியூமோனியாவை தூண்டல் போன்றவையும் ஏற்படுத்துகிறதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளமை மறுக்க முடியாது.

உலகிலேயே பல தசாப்தங்களுக்குப் பிறகு ஒரு தொற்று நோய் உலக பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளமை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம் ஆகும். இதன் கீழ் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்; பலர் உயிர் பலியானார். குறித்த இரு ஆண்டுகளில் உலக சனத் தொகையில் 775,431,255 பேர் தொற்றுக்குள்ளானமையும் அவற்றுள் 7,047,741 பேர் உயிர் பலியானமையும் புள்ளிவிபரவியல் ஆய்வு நிரூபிக்கிறது. சமூகத்தின் நிதர்சனத்தை மாற்றியமைத்த ஒரு முக்கிய அம்சமாக இது அடையாளப்படுத்தப்படுகிறது. இதன் போது ஏற்படுத்திய தாக்கம் அளப்பறியது என்றே கூறவேண்டும். சமூகத்தில் கல்வி, பொருளாதாரம், அரசியல், உளவியல் போன்ற பல துறைகளும் இதனால் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


அந்த வகையில் கொரோனா தொற்றுநோய் ஏற்படுத்திய தாக்கங்களை அரசியல், சமூக, பொருளாதார, உளவியல், கலாச்சாரம் என வகைப்படுத்தி நோக்குவோம். குறிப்பாக கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டதானது, பொருளாதார நெருக்கடி, வேலைவாய்ப்பின்மை, இடம்பெயர்வு என பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க காரணமானது.

இத்தொற்றுப் பரவல் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் பின்னடைவை சந்தித்தன. அரசாங்கம் நாட்டு மக்களை பாதுகாக்கும் பாரிய பொறுப்புடன் செயல்பட வேண்டியிருந்தது. பொருளாதார சிக்கல்கள் பல நாட்டிலும் ஏற்பட்டிருந்த அதே வேளையில், தங்கள் எல்லையின் கீழ் வாழும் மக்களின் நோய் நிவாரண ஏற்பாடுகள், அவர்களுக்கு பொருளாதார சிக்கலை நிவர்த்திக்கும் முகமாக சிறப்பு, சலுகை பண உதவிகள் என்பன வழங்கி மக்களை கவனிக்கும் பொறுப்பு அரசுக்கு இருந்தது. எனவே பல்வேறு அரசுகள் இதனால் பாதிக்கப்பட்டதால் கடன் ஒப்பந்தங்கள் பல நாடுகளில் இடம்பெற்றுமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக தொற்று வைரஸானது அரசியல் எனும் துறையின் கீழ் ஏற்படுத்திய பாதிப்பை நோக்கலாம்.

மேலும் சமூக, பொருளாதார, கலாச்சார தாக்கங்கள் எனும் வகையில் நோக்கும் பொழுதும் ஏற்பட்ட தாக்கம் அளப்பரியது என்று கூற வேண்டும். குறிப்பாக இதன் கீழ் கல்வி பாதிக்கப்பட்டது. ஊரடங்கின் காரணமாக மாணவர்கள் வீட்டினுள் ஆன்லைன் கல்விக்கு பழக்கப்பட்டனர். வசதியுள்ள மாணவர்களுக்கு கல்வியை தொடர்வதில் சிக்கல்கள் காணப்படாதிருந்த போதிலும், வசதி அற்ற மாணவர்களுக்கு கல்வியை முன் எடுத்து செல்ல முடியாமல் போனமை கவலைக்குரிய விடயமாகும். அதுமட்டுமில்லாமல் சமூகத்தில் ஏற்பட்ட இந்த களங்கத்தினால் உறவினர்களிடையே நெருக்கம் குறைவடைந்தது. இக்குறிப்பிட்ட காலத்தில் உறவினர்கள் தங்கள் வீட்டுக்கு வருவதை கூட மக்கள் விரும்பவில்லை. இன, மத, மொழி, கலாச்சாரங்களில் கூட மேலோங்கி இருந்த அன்னியோன்யம் குறைவடைந்தே சென்றது. இதுவும் சமூகத்தில் ஏற்பட்ட விளைவு என்று அடையாளப்படுத்துகிறோம். பொருளாதாரத்தில் முன்னணி வகித்த செல்வந்தர்கள் கூட இதன் கீழ் வறுமைக்கு இட்டுச் செல்லப்பட்டனர். இது மட்டுமல்லாது இன்னும் பல தாக்கங்களும் விளைவுகளும் ஏற்பட்டுமை குறித்து நீங்கள் தேடிப் பார்ப்பது அவசியம்.

இத்தொற்றினால் ஏற்பட்ட உளவியல் தாக்கம் குறித்து நோக்கம் போது, மக்கள் விருக்தி நிலைக்கு இட்டுச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதன் கீழ் மக்கள் தற்கொலைக்கு தூண்டப்பட்ட நிலையும் அவதானிக்கலாம். மேலும் தடுப்பூசி செலுத்துவது; ஊரடங்கு என்பன மக்களை மன அழுத்தத்திற்கு இட்டுச் சென்றன. அத்தோடு தடுப்பூசி செலுத்தியதால் தான் அதன் விளைவாக இன்று மக்களுக்கு நோய்கள் பல அதிகரித்துள்ளதோ?  என்ற அச்சம் கூட மக்கள் மனங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது. சிறுவர்கள் கூட மனநிலையால் பாதிக்கப்பட்டனர். மேலும் ஒருவர் தும்மும் போது கூட இது கொரோனாவாக இருக்குமோ? என்ற அச்சம் ஏற்பட்டமையும் குறிப்பிடலாம். இது தவிர மக்களின் நடத்தை கூட இவற்றால் மாறுபட்டமை  நோக்கத்தக்கது. அடிக்கடி கை கழுவுதல், இடைவெளி பேணுதல், முகக்கவசம் அணிதல் போன்றனவும் உளவியல் ரீதியான தாக்கத்தின் விளைவு என்றே அடையாளப்படுத்தப்படுகிறது. என்றபோதும் இதை காட்டிலும் உளவியல் தாக்கங்கள் அளப்பரியது. அதனை ஒரு சிறிய கட்டுரையின் கீழ் பட்டியல் படுத்துவது  முடியாத அம்சமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இத்தொற்று நோயினால் பல்வேறுபட்ட எதிர்மறையான தாக்கங்களினால் முழு உலகமும் பாதிக்கப்பட்டிருந்த போதிலும் கூட, இந்நோயால் நேர்மறையான தாக்கங்கள் ஏற்பட்டமையும் மறுக்க முடியாது. உதாரணமாக இருப்பதைக் கொண்டு சமாளித்தல், கணவன் மனைவி புரிந்துணர்வு ஏற்படுத்தப்படுதல், குடும்பத்துடன் நேரம் செலவழித்தல் போன்ற நல்ல விடயங்கள் ஏற்பட்டதற்கும் இத்தொற்று நோய் பங்காற்றி உள்ளது என்பது மறுக்க முடியாது. எது எவ்வாறு இருப்பினும், உலகையே ஆட்டிப்படைத்த பல போர்கள், நோய்களுக்கு மத்தியில் அண்மைக்காலத்தில் கண்ணுக்கு புலப்படாத ஒரு சிறு வைரசும் தன்னை ஒரு அடையாளமாக நிலை நிறுத்தி இருப்பது மறுக்க முடியாது.


Leo Noor Saleema 

👻 Happy Halloween

👻 Happy Halloween 👻 👻 Happy Halloween Introduction: When the Veil Thins On the evening of October 31st, a palpa...